வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மங்கலவார கிருத்திகை – குவிந்த பக்தர்கள்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மங்கலவார கிருத்திகை – குவிந்த பக்தர்கள்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மங்கலவார கிருத்திகை – குவிந்த பக்தர்கள்

மங்கலவார கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமான்!

காஞ்சிபுரம்: மங்கலவார கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புகழ்பெற்ற வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்புடைய இத்தலம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கிருத்திகையும் செவ்வாய்க்கிழமையும் ஒருசேர வந்ததை முன்னிட்டு அதிகாலையிலேயே திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் ஏழு அடி உயரத்தில் காட்சியளிக்கும் முருகப்பெருமானுக்கு மஞ்சள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ‘அரோகரா’ கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர்.

வள்ளி தெய்வானை சமேத உற்சவருக்கு சிறப்பு பூஜை

உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு மந்திர புஷ்ப பூஜை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருமணத் தடை நீங்க வழிபடும் சிறப்புத் தலம்

வல்லன் எனும் அசுரனை முருகப்பெருமான் அழித்து இத்தலத்தில் கோயில் கொண்டதால் இத்தலம் வல்லக்கோட்டை என அழைக்கப்படுகிறது. இங்கு சத்ரு சம்ஹார யாகம் செய்து வழிபடுவது சிறப்பு பரிகாரமாகக் கருதப்படுகிறது.

மேலும், தேவர்களின் தலைவனான இந்திரன் இங்கு வந்து வழிபட்டு இந்திராணியைத் திருமணம் செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் வல்லக்கோட்டை முருகன் கோயில் திருமண வரம் வேண்டி வழிபடும் சிறப்புமிக்க பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இங்கு பக்தர்களின் வேண்டுதலுக்காக கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களும், திருமணம் நிறைவேறிய பக்தர்களும் பெருமளவில் வந்து கலந்துகொள்கின்றனர்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

மங்கலவார கிருத்திகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால், அவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கதம்ப சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.

பொது தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனத்தில் வந்த பக்தர்கள் சில நிமிடங்களிலேயே தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக நிழற்பந்தல் மற்றும் இலவச மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.

மண்டல இணை ஆணையர் திரு. சி. குமரதுரை அவர்களின் அறிவுரைப்படி, பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் செய்திருந்தார்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் மங்கலவார கிருத்திகை – குவிந்த பக்தர்கள்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *