17 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்; காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தில் தங்கத் தேர் தயார்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், நீண்ட காலமாகப் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்த தங்கத் தேர் உருவாக்கும் பணி நிறைவடைந்து, பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காகத் தயாராகியுள்ளது .
இந்தத் தங்கத் தேரானது, 25 அடி உயரமும், 10 அடி அகலமும், 13 அடி நீளமும் கொண்டதாக, ஐந்து அடுக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தேர் தயாரிப்பதற்கான பணிகளை அருள்மிகு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக இந்த திருப்பணிகள் நடைபெற்று உள்ளது.
இதில் நான்கு குதிரைகள், நான்கு சாமரப் பெண்கள், தேர் ஓட்டும் பிரம்மா, 16 நன்றிச் சிலைகள், 8 கந்தர்வர்கள் மற்றும் 8 சங்கபூதங்கள் போன்ற அற்புதமான சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 1600 அடி பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, இரண்டு டன் தாமிரத்தின் மீது தங்க முலாம் பூசப்பட்டு இந்தத் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி பெரியவரிடம் வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, அவர் முக்தி அடைந்த பின் பால பெரியவா அவர்களின் வழிகாட்டுதலுடன் முழுமை பெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை ஒத்துழைப்புடன் தேர் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த தங்கத் தேர் டிசம்பர் 4ஆம் தேதி இந்து சமய துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் 5ஆம் தேதி உச்சி வேளையில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் முக்கிய விருந்தினர் ஒருவரால் தங்க தேருக்கு பூஜைகள் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விழாவின் சிகர நிகழ்வாக, டிசம்பர் 6ஆம் தேதி காலையில் காஞ்சி சங்கர விஜேந்திர சரஸ்வதி மற்றும் சக்தி சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் தேரை அர்ப்பணித்த பிறகு, மாலை 3 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுக்க உள்ளனர்.
தேர் மண்டபத்தில் ஒப்படைக்கும் விழாவைத் தொடர்ந்து, சாந்தி பூஜைகள் மற்றும் பிரவேச பலி போன்ற சடங்குகளும் நடைபெறும். டிசம்பர் 7ஆம் தேதி காலையில் 7 மணியிலிருந்து 8 மணிக்குள் தேருக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
குறிப்பாக, சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன், அன்று மாலையே இந்த புதிய தங்கத் தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெறும்.
இந்தக் கும்பாபிஷேகம் மற்றும் புதிய தங்கத் தேர் ஊர்வலம் ஆகியவை கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கே பெரும் திருவிழாவாக அமையவுள்ளது. என அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்ரமணியன் தெரிவித்தார் உடன் நிர்வாகிகள் வலசை ஜெயராமன் ஆர் எஸ் எம் கிருஷ்ணன் பத்மநாபன் பட்டாபிராமன் ஆகியோர் இருந்தனர்.

