“அண்ணாமலையுடன் இருப்பது நான்தான், நிகிதா இல்லை” – பாஜக பெண் நிர்வாகி பரபரப்பு புகார்
அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா என கூறி தமது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதாக பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் புகார் அளித்த நிகிதா தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் நிகிதா இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணாமலையுடன் புகைப்படத்தில் இருப்பது நிகிதா கிடையாது, தனது புகைப்படத்தை தவறாக பரப்புவதாக கூறி பாஜக பெண் நிர்வாகி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரான பொன்னேரியை சேர்ந்த ராஜினி என்ற பெண் நிர்வாகி தமது கட்சியினருடன் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
என் மண், என் மக்கள் யாத்திரையின் போது முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையுடன் தான், எடுத்த புகைப்படத்தை நிகிதா என கூறி சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்து வருவதாகவும், தமது கட்சிக்கும், தமிழ்நாடு பாஜகவின் பெயருக்கும் களங்கம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
நிகிதா புகைப்படம் என பகிரப்பட்ட புகைப்படத்தில் அண்ணாமலையுடன் இருப்பது தான் தான் என பொன்னேரியை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

