பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட வன்முறைகள் – தொல். திருமாவளவன் விமர்சனம்
 
					பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட வன்முறைகளை வெறுப்பு அரசியலின் மூலம் நிகழ்த்தப்பட்டு வருவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தேசிய கட்சிகள் பலவீனமடையும் மாநிலங்களில் அவ்வப்போது கூட்டணி ஆட்சி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்காக ஜனதா கட்சி உருவான காலத்தில் டெல்லியில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆளும் கட்சியோ அல்லது ஆண்ட கட்சியோ பலவீனமடையும்போது தான் கூட்டணி ஆட்சி முறை நடைமுறைக்கு வரும்” என்றார்.
“1967க்கு பிறகு திமுக, அதிமுக இருதுருவங்களாக அரசியல் செய்து வருகின்றன. இன்று வரை இரு கட்சிகளும் மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக, பெரிய வாக்கு வங்கி கட்சிகளாக இருக்கும் உண்மையை மறுக்க முடியாது”.
“இந்த 2 கட்சிகளில் ஒன்று எப்போது பலவீனம் அடைகிறதோ அப்போது தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உருவாகும். கூட்டணி ஆட்சி தொடர்பான பேச்சு தற்போது எழுந்துள்ளதால் ஒரு கட்சி பலவீனம் அடைந்துள்ளதை குறிக்கிறது”.
“இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி நடைமுறைக்கு வருகிறதோ இல்லையோ, அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தயார் என்ற தோற்றம் உருவாகி உள்ளது”.
“இந்த தேர்தலில் இந்த சூழல் உருவானதாக தெரியவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதத்தை விசிக தான் தொடங்கி வைத்தது”.
“தமிழ்நாடு மட்டுமின்றி பரவலாக பல மாநிலங்களில் காவல்துறையினரின் அத்துமீறல்களை பார்த்து வருகிறது. சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ ஒவ்வொரு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வெடிக்கின்றன”.
பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்ட வன்முறைகள் வெறுப்பு அரசியலின் மூலம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மதத்தின் பெயராலான வன்முறைகள், வெறுப்பு அரசியலின் ஊடாக வெடிக்கவில்லை. சாதிய கொடுமைகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் அவ்வப்போது தலை தூக்குகிறது”.
“இவற்றை கட்டுப்படுத்தி முற்றாக ஒழிக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு தனி கவனம் செலுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு 2 திராவிட கட்சிகளும் பலவீனப்படவில்லை. கூட்டணி தேவை என்ற அளவில் பலவீனமாக இருக்கிறது, கூட்டணி ஆட்சி தேவை என்ற அளவிற்கு பலவீனப்படவில்லை” என்றார்.


 
			 
			 
			 
			 
			