ஆணவக் கொலை: கவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி MP
 
					ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி. ஆறுதல் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்குத் தனது தாத்தாவுடன் சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சுர்ஜித், கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.
சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடனிருந்தனர்.


 
			 
			 
			 
			 
			