இதுதான் திமுக ஆட்சியின் லட்சணமா? – நகராட்சி மன்றத்தில் காரசாரம்!
மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூட, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா?
பொன்னேரி திமுக நகராட்சி தலைவருடன் அதிமுக நகர மன்ற துணைத் தலைவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உறுப்பினர்கள் கூட்டம் பாதியிலேயே முடிவடைந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.
இதில் 18 திமுக உறுப்பினர்களின் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் தற்போது 17 உறுப்பினர்களும், இதேபோன்று 9 அதிமுக உறுப்பினர்களும் உள்ளனர்.
நகர மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பரிமளம் என்பவரும், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பதவி வகித்து வருகின்றனர்.
மேலும் இங்கு ஆணையராக இருந்தவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இதன் காரணமாக தற்போது திருநின்றவூர் நகராட்சி ஆணையரான கீர்த்தனா என்பவர் கூடுதலாக இதன் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றபோது அதிமுக உறுப்பினர்கள் “வார்டுகளில் சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற எந்த பணிகளும் நடைபெறவில்லை” என குற்றம் சாட்டினர்.

அப்போது அதிமுக துணை தலைவர் விஜயகுமார், “தொடர்ந்து பொறுப்பு ஆணையர் அலுவலகத்திற்கு வருவதில்லை அரசு வழங்கிய கைபேசியை தொடர்பு கொண்டால் எப்போதும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருப்பதாகவும், மக்களின் பிரச்சினைகள் குறித்து கூட பேச முடியாத நிலை உள்ளது இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா?” என கேள்வி எழுப்பினார்.
இதனால், திமுக நகர மன்ற தலைவர் பரிமளத்திற்கும்- துணை தலைவர் விஜயகுமார்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது உறுப்பினர்கள் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து சென்று நகர மன்ற தலைவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக உறுப்பினர் ஒருவர் நகர மன்ற தலைவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் அவரிடம் துணைத் தலைவர் விஜயகுமாரும் அதிமுக உறுப்பினர் ஒருவரும் வாக்குவாதம் செய்தனர்.
இதன் காரணமாக கூட்டம் பாதியில் முடிந்தது உறுப்பினர்கள் அனைவரும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

