கோட்டை நோக்கி போராட்டம் – செவிலியர் சங்கம் எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கூட்டமைப்பு இணைந்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவாயிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், “துணை சுகாதார மையங்களில் M. L. H. P பணி நியமனம் செய்வதை கைவிடவும், துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியர்களை தடுப்பூசி பணிகளில் ஈடுபடுத்துவதை கைவிடவேண்டும்,
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆயிரம் ஊதியம் பெற்றுக்கொண்டு சொந்த செலவு செய்து கிராம சுகாதார செவிலியர்கள் பகுதி நேர சுகாதார ஊதியத்திலிருந்து செலவு செய்து கிராம செவிலியர்கள் இரவுபகல் பார்க்காமல் ஞாயிறு விடுமுறை நாட்கள் மட்டும் அல்லாது பண்டிகை நாட்களில்கூட விடுமுறை இன்றி கொரோனா தடுப்பு ஊசி பணியில் ஈடுபட்டோம்,
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கிராம சுகாதார செவிலியர்கள் கொரோனா தடுப்பு ஊசி மற்றும் வழக்கமாக செய்யும் பணியினையும் தடுப்பூசி பணியையும் கிராம சுகாதார செவிலியர்கள் செய்ய மறுத்ததாக ஊடகங்கள் முன்பு கூறியுள்ளார். இது சம்பந்தமாக அமைச்சர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டும்,
செவிலியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் தெரிவித்த அப்பட்டமான பொய்யான செய்தியை பார்த்த அனைத்து செவிலியர்களும் அதிர்ச்சியும் கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்” என்று தெரிவித்தும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுகாதாரத்துறை அமைச்சர் தாங்கள் பேசியதை வாபஸ் பெறவேண்டும், கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி கோட்டை நோக்கி போராட்டம் எனவும் அப்போது அவர்கள் எச்சரித்துள்ளனர்.

