பள்ளிகள் தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் : தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேண்டுகோள்
பள்ளிகள் தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பள்ளிகள் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார்.

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பள்ளிகள் சார்பில் 25 வது புத்தகக் கண்காட்சி தொடக்க விழா எஸ்எஸ்கேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் செயலாளர் சி.கே.ராமன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் டி.ஆர்.சுப்பிரமணியன், போதி மைய இயக்குநர் ரமேஷ், எஸ்எஸ்கேவி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆர்.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.ராதா வரவேற்றார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கலந்து கொண்டு புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசியது.
“புத்தக கண்காட்சிகள் நடத்தும் பள்ளிகள் அதிகமாக இல்லை. இப்பள்ளியில் புத்தக கண்காட்சி நடத்துவதைப் போல பிற பள்ளிகளும் நடத்த வேண்டும். குழந்தைகள், மாணவர்கள் புத்தகம் வாங்குகிற போது தனது புத்தகம், தான் வாங்கிய புத்தகம் என்று படிப்பார்கள்.பாதுகாப்பார்கள்.
பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். குழந்தைகளை எழுத்துக் கூட்டிப் படிக்க வைக்க பழக்கப்படுத்த வேண்டும்.குழந்தைகள் 10 வயது வரை வாசிக்க பழகி விட்டால் கடைசி வரை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
வீட்டுக்கு ஒரு நூலகம் இருந்தாலே படிக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்து விடும்.

வாசிப்பின் தன்மை எப்படிப்பட்டது என்றால் நிதிநிலை அறிக்கையில் நூலகங்களுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்று சொன்ன போது, ஒருவர் எழுந்து சொன்னார் ‘குறைப்பதாக இருந்தால் குறைத்துக் கொள்ளுங்கள். புத்தகங்கள் குறையக்குறைய சிறைச்சாலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்’ என்றார்.
புத்தகங்களை புரட்டப் புரட்ட வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிற மகத்துவம் புத்தகங்களுக்கு உள்ளது. கைபேசியில் பலவற்றையும் பதிவிறக்கம் செய்வதற்காகவே அதைப் பயன்படுத்துகிறோம்.

கைபேசியில் உள்ள சிம்கார்டு இல்லையென்றால் பதிவிறக்கம் செய்த அனைத்தும் அழிந்து விடும். அதற்குப் பதிலாக நல்ல புத்தகங்கள் பலவற்றையும் படித்து மூளையில் பதிவேற்றம் செய்து கொண்டால் அவையனைத்தும் மனதில் தங்கும்.
50 வயதுவரை நாம் படிப்பது அனைத்தும் மனதில் பதியும். 70 வயதுக்குப் பிறகு நாம் படிப்பது மனதில் தங்காது.
எனவே தான் பதிவேற்றம் செய்வதை விட பதிவேற்றம் செய்யுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் படிப்பதற்கென்றே 120 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்கேவி பள்ளி தொடங்கப் பட்டிருப்பது ஒரு மாபெரும் புரட்சி. 100 ஆண்டுகளை கடப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.
தலை முறைகளை தாண்டி ஒரு அமைப்பு இருப்பது இறைச்சித்தம்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பு 1934 ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரின் 13வது நினைவைப் போற்றும் விதமாக அவரது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அன்று நடந்து கொண்டிருந்த விடுதலைப் போராட்டத்துக்கு வடிகாலாகவும் உருவாக்கப்பட்ட நாளிதழே தினமணி.
புத்தக வாசிப்புக்கு குழந்தைகள் தயாராகி விட்டால் அது இளையதலைமுறைக்கு கிடைத்த வெற்றி” என்றும் பேசினார்.
விழாவில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து எஸ்எஸ்கேவி ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஷாலினியும்,புத்தக விற்பனையாளர் விஜயராஜ் ஆகியோரும் பேசினார்கள். எஸ்எஸ்கேவி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.
புத்தகக் கண்காட்சியில் 30 தமிழ், 10 ஆங்கிலம் உட்பட மொத்தம் 40 பதிப்பகங்களின் புத்தகங்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.புத்தகக் கண்காட்சி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

