அதிமுக ஆட்சியில்தான் போதைப் பழக்கம் அதிகரித்தது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஏற்பாட்டின் பேரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பங்கேற்று விழா சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் எழிலரசன் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் பகுதி செயலாளர்கள்.
அம்மன் பில்டர்ஸ் தாஸ் டில்லிபாபு ஒன்றிய செயலாளர் வட்ட நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய மாநகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
“வேளாண் அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு (திட்டம் 2.0): விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்றத்தில் அறிவித்தபடி ‘வேளாண் 2.0’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் (வியாழன், சனி மற்றும் ஞாயிறு) கிராம ஊராட்சிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளைச் சந்திக்க வேண்டும்.”

“அதிகாரிகள் வயல்களுக்கே சென்று பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், விவசாயிகளின் குறைகளைக் கேட்கவும் வேண்டும். பின்னர், வெள்ளிக்கிழமையன்று அலுவலகத்தில் அந்தப் புகார்கள் குறித்த நடவடிக்கைகளையும் விளக்கங்களையும் அளிக்க வேண்டும், அதிகாரிகள் கட்டாயம் களத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்”.
“பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு விவசாயம் செய்த அனுபவம் கிடையாது. அவர் எடப்பாடி பழனிசாமியின் முகவர் போலவும், அதிமுகவின் ‘பி-டீம்’ (B-Team) போலவும் செயல்பட்டு அரசுக்கு எதிராகப் பேசுகிறார். வன்னியர்களுக்கு முதலில் இடஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்தான்.”

“கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக அவசரமாக 10.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் செய்ததால் அது நீதிமன்றத்தில் நிற்கவில்லை. முறையான பரிந்துரை பெற்றே அதைச் செயல்படுத்த முடியும்”.
“கொரோனா காலத்தில், அதிமுக ஆட்சியில்தான் போதைப் பழக்கம் அதிகரித்தது. அப்போதே அதைத் தடுக்கத் தவறிவிட்டனர். குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் விட்டுச்சென்ற இந்தப் பிரச்சனையைத் திமுக அரசு தற்போது கலையெடுத்தும்,தடுத்தும் வருகிறது.”

“இளைஞர்களை நல்வழிப்படுத்தவும், போதைப் பழக்கத்திலிருந்து மீட்கவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிராமந்தோறும் விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். தமிழர் கலாச்சாரம் மற்றும் வீர விளையாட்டுகள் மூலம் இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்படுகிறார்கள்” தெரிவித்தார்.

