தேசிய தன்னார்வ இரத்ததான தினம்: 1400+ உயிர்களைக் காத்த காஞ்சிபுரம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு அரசு விருது!
தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, சிறந்த முறையில் இரத்ததான சேவையாற்றியதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அரசு சார்பில் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இயல் நிலையம் (IOG) மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை (ICH) வளாகத்தில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து தேசிய இரத்ததான நாள் விழா நேற்று (09.01.2025) நடைபெற்றது.
இவ்விழாவில், 2024-2025 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 17-க்கும் மேற்பட்ட மாபெரும் இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டதையும், 1410-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அவசர கால இரத்ததானம் வழங்கியதையும் பாராட்டி சிறப்பு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விருதினை மருத்துவர்கள் “டாக்டர். ஆனந்தி (IOG)”, “டாக்டர். ராணி (IOG)” மற்றும் “டாக்டர். வெங்கடேசன் (ICH)” ஆகியோர் வழங்க, காஞ்சிபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் மருத்துவரணி செயலாளர் திரு. “சர்புதீன்” மற்றும் துணைச் செயலாளர் திரு. “அன்சாரி” ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும், தொடர்ந்து இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவைகளை செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தென்சென்னை மாவட்ட நிர்வாகி “அப்துல்லா”, வடசென்னை மாவட்ட நிர்வாகி “யூசுப்” மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகி “நூர் மஸ்தான்” ஆகியவர்களுக்கும் இவ்விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சாதி, மத பேதமின்றி மனிதநேய அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை மருத்துவர்கள் வெகுவாக பாராட்டினர்.


