பள்ளி வேன்மீது ரயில் மோதி பயங்கரவிபத்து – உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஆறுதல்!
கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் பள்ளி வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
ரயில் மோதியதில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் இருந்த பள்ளி குழந்தைகள், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தண்டவாளம் எங்கும் சிதறி கிடந்தன.
இந்த கோர விபத்தில் பள்ளி மாணவி சாருமதி, மாணவன் நிமலேஷ் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவன் செழியன், சிகிச்சை பலனி உயிரிழந்தான். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த செழியனும், சாருமதியும் சகோதரன், சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் வருவதை ஓட்டுநர் கவனிக்காமல் கடக்க முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது என தெரிகிறது. ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மங்குப்பத்தில் இன்று காலை நடந்த மோசமான ரயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்த செல்வங்களான நிமிலேஷ் (வயது 12), த/பெ விஜயசந்திரகுமார் மற்றும் சாருமதி (வயது 16), த/பெ. திராவிடமணி ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

