காஞ்சிபுரம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நவ சண்டி மகாயாகம்
காஞ்சிபுரம் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக நவ சண்டி மகாயாகம் விமர்சயாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் நோய் நொடியின்றி வாழ்வு பெறவும் அனைத்து செல்வங்களும் பெற்று சகல சௌபாக்கியங்கள் பெறவும் வேண்டி நவ சண்டி மகா யாகம் நடைபெற்றது.
இதில் காலை கலச பூஜை, நவாவரண பூஜை, கன்னியா பூஜை, சுகாசினி பூஜை, வடுகபூஜை, தம்பதி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜை சிறப்பாக துவங்கியது.

இதில் வீரத்திற்கு புகழ்பெற்ற மகாகாளி சண்டிகை, செல்வத்திற்கு உகந்த மகாலட்சுமி உள்ளிட்ட 13 அத்தியாயமாக அம்மனுக்கு வேண்டிய பழ வகைகள், தேங்காய் வகைகள், புஷ்ப வகைகள் மற்றும் வாசனை வண்ணத் திரவியங்கள் யாகத்தில் சமர்ப்பித்து வழிபாடு செய்யப்பட்டது.
மேலும் வஸ்திரங்கள் மற்றும் மாங்கல்யம் சமர்ப்பித்து தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் கலச அபிஷேகம் மற்றும் தீபாராத நிகழ்வு நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை டாக்டர் திருப்பூர் தணிகாசலம் பக்தர்களுடன் இணைந்து சிறப்பாக செய்திருந்தார். யாகசாலை பூஜைகளை ஏகாம்பரநாதர் ஆலய தல மிராசுதாரர் மகேஷ் சிவாச்சாரியார் ஆன்மீக நாதர் ஆலய கிஷோர் கனபாடிகள் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாலின் அருளை பெற்று சென்றனர்.


