சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: 9 காவலர்களுக்கு மரண தண்டனை
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளாக 9 காவலர்களுக்கு இன்று தண்டனை விவரம்: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை வித்ததது உயர்நீதிமன்றம் மதுரை கிளை
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கொரோனா ஊரடங்கின்போது குறித்த நேரத்தைத் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி, அவர்கள் இருவரையும்,19/06/2020 இரவு சாத்தான்குளம் போலீஸார், காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஜூன் 22-ம் தேதி பென்னிக்சும், மறுநாள் ஜெயராஜும் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்புசார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பால்துரை சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், 23/03/2026 அன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். தந்தை, மகன் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளதாகவும், மரணத்தை விளைவிக்கும் காயங்கள் உருவாகும் வகையில் இருவரும் தாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி, அவர்களது உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறாக, மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு இருந்துள்ளன. இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசார், இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர் என்றும், போலீஸார் தாக்கியதால்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது என்றும் கூறினார்.
சாட்சியங்களின் அடிப்படையில் 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே, குற்றவாளிகள் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என, உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீதிபதி முத்துக்குமரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, “இது அரிதினும் அரிதான வழக்கு. தந்தை – மகன் இருவரையும் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் அடைத்து வைத்து, விடிய விடிய தாக்கி, கொடுமையாக கொலை செய்துள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸை பழிவாங்கும் நோக்கில் தாக்கியுள்ளனர். காவல் மரணங்கள் கொடூரமானது என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தாக்கியதால் மற்ற காவலர்களும் இணைந்து தாக்கியதாகக் கூறியுள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால் உயரதிகாரிகளிடம் கூறி இந்தச் சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், குற்றத்துக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அந்த வகையில் அவர்களும் குற்றவாளிகளே. எனவே, குற்றவாளிகள் 9 பேருக்கும் இந்த நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கிறது,” என்றார்.
மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் உட்பட மொத்தம் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை பென்னிக்ஸ் தாயாரிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

