விபரீதம் அறியாமல் குளத்தில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் மருதகுடி ஊரணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகில் உள்ள மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணிகுளம் உள்ளது. சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது என கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருவிழா நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் பதினோறாம் தேதி மாலை திருவேங்கப்புடையான் பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் மாதவன், செந்தில் என்பவரின் மகன் பாலமுருகன் 10 வயது, ஸ்ரீதர் என்பவரின் மகன் ஜஸ்வந்த் 8 வயது ஆகிய மூன்று பேரும் திருவேங்கப்புடையான் பட்டியில் உள்ள பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லாமல் மருதகுடி ஊரணி குளத்திற்கு குளிப்பதற்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் மாதவன், பாலமுருகன் இருவரும் ஐந்தாம் வகுப்பும், ஜஸ்வந்த் மூன்றாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் மாதவன் உட்பட 3 பேரும் வீட்டிற்கு வராததால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேட ஆரம்பித்துள்ளனர்.
அப்பொழுதுதான் அவர்கள் மருதகுடி கிராமத்திற்கு சென்றதாக தகவல் கிடைத்து இரவு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஊரணி குளத்தின் கரையில் சிறுவர்கள் அணிந்திருந்த காலணிகளை பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடன் அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபொழுது மூன்று சிறுவர்களும் குளத்தில் மூழ்கி கிடந்தது தெரியவந்தது.

108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நள்ளிரவு சிறுவர்களை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் மூன்று பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குளத்தில் ஆழம் அதிகமாக இருந்துள்ளது. குளிப்பதற்காக இறங்கிய சிறுவர்கள் நீச்சல் தெரியாமல் மூழ்கி இருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் தெரிவித்தனர். வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

