திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தங்களுக்காக வழங்கிய இலவச பட்டாவை வேறு நபர்களுக்கு வழங்கியதாக கூறி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்கள், அடுப்பு, விறகு உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அலகுவார்பட்டி ஏடி காலனி இப்பகுதி மக்களுக்கு 1998இல் சுமார் 400 பேருக்கு தமிழக அரசு இலவச பட்டா வழங்கியுள்ளது. மேலும் வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களுக்காக கொடுத்த இலவச பட்டாவை மற்ற நபர்களுக்கு தற்போது தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சிய பதில் கூறி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தண்ணீர் குடம், அடுப்பு, விறகு, சமைப்பதற்கான பொருட்கள் என கொண்டு வந்து குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது போராட்டம் ஓயாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதியாக இருந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்டது. போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமாதானம் ஆகாததால் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.

