திருவள்ளூரில் திமுக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் – பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு நீதிவேண்டும் என வலியுறுத்தல்
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 8 நாட்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் சிறுமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வந்த அதிமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவியது.

திருவள்ளூரில் கடந்த 12 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8 வயது சிறுமியை மர்ம நபர் பின் தொடர்ந்து சென்று அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் போக்சோ வழக்குபதிவு செய்து காவல் துறையினர் தேடிவரும் நிலையில், 8 நாட்களாகியும் இதுவரை அந்த நபரை கைது செய்யவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட இலையில் அதிமுக சார்பில் இன்று சிறுமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் துறையினர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் செல்போன் தொலைந்தால் கூட உடனடியாக கைது செய்யும் காவல் துறையினர், சம்பவம் நடந்து இதுவரை 8 நாட்களாகியும் கைது செய்யவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது நடவடிக்கை காலதாமதமானதால் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து உறவினர்கள் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

