பொன்னேரியில் விடியற்காலை இருந்தே மதுபான பார்கள் ஜோர்: அரங்கேறும் தொடர் விபத்துகள்
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் விடியற்காலையில் இருந்தே மதுபான பார்கள் செயல்பட்டு வருவதால் விபத்துகள் நேர்ந்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கூடுவாஞ்சேரி பகுதியைச் சார்ந்த திலீப் இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது திலீப் வாகனம் மோதியதில் அவரது கால் முறிந்து கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போக்குவரத்து புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சட்டவிரோதமாக செயல்படும் மதுபான கடை பார்கள், அதிகாலையிலேயே திறக்கப்படுவதால் மது பிரியர்கள் மது அருந்திவிட்டு பணிகளுக்கு செல்லாமல் விபத்துக்குள் உள்ளாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது என சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். பார்கள் செயல்படுவதை காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

