பரமக்குடி அருகே அரசு விதிமுறைகளை மீறி பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு – சமூக ஆர்வலர்கள் கண்டனம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு விதிமுறைகளை மீறி ஐம்பதுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட காடரந்தகுடி கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளது.
இந்த நிலையில் பனைமரம் தமிழக அரசின் மாநில மரமாக விளங்கிவரும் நிலையில், மேலும் அழிந்துவரும் பனை மரங்களை பாதுகாப்பதற்காக அரசு சட்டம் இயற்றியுள்ளது. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் முறையான அனுமதி பெறவேண்டும்.
இந்த நிலையில் காடரந்தகுடியில் தனியார் பட்டா நிலங்களில் உள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பனை மரங்களை மர்ம நபர்கள் சிலர் அரசு உத்தரவை மீறி வெட்டி செங்கல் சூளை மற்றும் கட்டுமான பணிகளுக்கு விற்று உள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பனை மரங்களை வெட்ட முயன்ற மரம் வெட்டும் தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராமத்தினர், வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்ததின் பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வெட்டப்பட்ட மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

