ராமநாதபுரம் ராஜமாரியம்மன் கோயிலில் 3வது ஆடி வெள்ளி திருவிழா
ராமநாதபுரம் ராஜமாரியம்மன் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய மாரியம்மன்கோயில் என்றழைக்கப்படும் ராஜமாரியம்மன் கோயிலில் மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி, வழிபட்டனர். ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பெண்கள் குலவையிட்டு கலசத்தில் ராஜ மாரியம்மனுக்கு அபிஷேகத்திற்கு மஞ்சள் நீர் கொண்டு வந்தனர்.
கோயிலில் பரம்பரை பூசாரி ராஜா தலைமையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து வந்தவுடன் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரவியப்பொடி, எல்பொடி, சந்தனம், மஞ்சள், விபூதி, மாவுப்பொடி, இளநீர், தயிர், ஆரஞ்சு சாறு, ஆப்பிள், 3000 லிட்டர் பால், நாட்டுச்சக்கரை, மாதுளை, மற்றும் 30 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதன் பிறகு ராஜமாரியம்மன் சயணகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் கேப்பைகூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை பூசாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

