ஸ்ரீ சென்னியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கு விழா: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான ஸ்ரீ சென்னியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்த சென்னியம்மன் ஆலய வடிவமாகவும், பாறை வடிவமாகவும், ஒரே இடத்தில் இருவேறு காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாது வெளிமாவட்டம் வெளி மாநில பகுதியில் இருந்து திரளானோர் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு வந்து செல்ல மூன்று மாவட்ட பணிமனைகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், செங்கம் வட்டார தலைமை மருத்துவர் சிலம்பரசன் தலைமையிலான மருத்துவ குழு அமைக்கப்பட்டும், செங்கம் டிஎஸ்பி ராஜன் தலைமையிலான காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஏற்கனவே ஆன்மீக நகரம் என்று சொல்லும் திருவண்ணாமலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சென்னியம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாகவே காணப்பட்டது.

