காஞ்சிபுரம்: மதகு இடிக்கப்பட்டதால் குடிநீர் இன்றி தவிக்கும் கால்நடைகள்: மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் புகார்

விவசாய நிலங்கள் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் தாங்கல் ஏரிக்கு மதகு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஏரியிலிருந்து மழை நீர் வெளியேறி வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் தாங்கல் ஏரியில் மதகு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செந்தில்குமார் என்பவர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
“காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்க்கதிர்பூர் குண்டு குளம் பகுதியில் உள்ள தாங்கல் ஏரி, செவிலிமேடு – கீழம்பி இணைக்கும் புறவழிச்சாலையில் அமைந்துள்ளது. தற்போது இந்த புறவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தாங்கல் ஏரியின் மதகு இடிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பைப்லைன் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.”

“புதிய மதகு அமைக்கப்படாமல் பணி முடியும் நிலையில் உள்ளது. தற்போது பெய்து வரும் மழைநீர் தாங்கல் ஏரியில் தேங்காமல் வெளியேறி வருவதாகவும், இதனால் இந்த ஏரியை நம்பி வாழும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.”
“மேலும், இந்த ஏரியின் நீரைப் பயன்படுத்தி வரும் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கும் நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், ஏரிக்கு புதிய மதகு அமைத்துத் தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

