விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் – TVK மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன் சூளுரை
2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாநில துணைப் பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன் சூளுரைத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய நிர்வாகிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபத்ரா முருகன், தமிழக வெற்றிக்கழக மாநில துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுபத்ரா முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் ஜே.கே.ஆர்.முருகன் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள அண்ணா, பெரியார், முத்துராமலிங்க தேவர், காமராஜர், குரூஸ்பர்னாந்த் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொதுச் செயலாளர் சுபத்ரா முருகன், தனக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியை அறிவித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் தமிழக முதல்வராக நடிகர் விஜய் அரியணை ஏறுவார் என தெரிவித்தார்.
இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் ஜே.கே.ஆர் முருகன் கூறுகையில், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் நடைபெற உள்ளதாகவும், இந்த சுற்றுப் பயணம் தென் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் எதிரிகளே பயப்படும் அளவிற்கு உள்ளதாகவும், தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று தமிழக முதல்வராக விஜயை அரியணையில் ஏற்றுவது தான் எங்கள் லட்சியம் எனவும் அவர் தெரிவித்தார்.

