தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோ-ஆப்டெக்ஸ் வஉசி விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம்.

தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்திருக்கும் வ.உசி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை விபாஸ்ரீ முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதிமுதல் ஜனவரி 31ம் தேதிவரை தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த தீபாவளி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுபுடவைகள், திருப்புவனம் பட்டு புடவைகள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி புடவைகள். போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ். மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏரளமாக வந்துள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் நெல்லை மண்டலத்தில் உள்ள 13 விற்பனை நிலையத்திலும் ரூ.10 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் உள்ளது.
கடந்த தீபாவளி 2024ம் ஆண்டு பண்டிகை காலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.50 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2025ம் ஆண்டிற்கு ரூ.2 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது.
இவ்விழாவில் கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், திருநெல்வேலி கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

