ராமநாதபுரம் இராதானூர் கண்மாய் மடை உடைப்பு – மணல் கடத்தல் புகாரால் விவசாயிகள் கொந்தளிப்பு

ராமநாதபுரம் இராதானூர் கண்மாய் மடை உடைப்பு – மணல் கடத்தல் புகாரால் விவசாயிகள் கொந்தளிப்பு

ராமநாதபுரம் அருகே இராதானூர் கண்மாய் மடை உடைப்பு – மணல் கடத்தல் புகாரால் விவசாயிகள் கொந்தளிப்பு

கண்மாயில் 12 அடி ஆழம் வரை மணல் வெட்டி கடத்தல் என குற்றச்சாட்டு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஆனந்தூர் அருகே உள்ள இராதானூர் கண்மாயில், அனுமதியின்றி மணல் வெட்டி கடத்தப்பட்டதாகவும், இதற்காக கண்மாய் கரை ஓடை உடைக்கப்பட்டதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இராதானூர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாயில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களை பயன்படுத்தி சுமார் 12 அடி ஆழம் வரை மணலை வெட்டி கடத்தியதாக கூறப்படுகிறது.

தடுக்கச் சென்ற விவசாயிகள் மீது தாக்குதல் என புகார்

மணல் கடத்தப்படுவதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சம்பவ இடத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தியதாகவும், அப்போது அவர்களிடம் சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஒருவர் கிராமத்திற்குச் சென்று பொதுமக்களை அழைத்து வந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டர்களுடன் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

கண்மாய் கரை ஓடை உடைப்பு

மேலும், இரவு நேரங்களில் மணலை கடத்துவதற்கு வசதியாக கண்மாய் கரை ஓடையை உடைத்து மணல் எடுத்துச் சென்றதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் திடீரென கனமழை பெய்தாலோ அல்லது கண்மாய் முழு கொள்ளளவை எட்டினாலோ, தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

12 கிராமங்களின் விவசாயத்திற்கு நீராதாரம்

இராதானூர் கண்மாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கியமான பெரிய கண்மாய்களில் ஒன்றாக இருப்பதாகவும், இதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 12 கிராமங்களின் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தேவையான நீராதாரம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கண்மாயில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டால் நீர்த்தேக்கத்தின் தன்மை பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியின் கனிம வளங்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கிராம மக்களே தற்காலிகமாக சீரமைப்பு

கண்மாய் கரை ஓடை உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து அந்தப் பகுதியை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதையடுத்து தமிழக முதலமைச்சர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கிராம மக்கள் சார்பில் மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல் கடத்தலை தடுக்க கோரிக்கை

வானம் பார்த்த பூமியாக விளங்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ள கண்மாய்களை பாதுகாக்க வேண்டும் என்றும், கண்மாய்களில் நடைபெறும் மணல் மற்றும் சவுடுமண் கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், உடைக்கப்பட்ட கண்மாய் கரையை நிரந்தரமாக சீரமைத்து, சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் இராதானூர் கண்மாய் மடை உடைப்பு – மணல் கடத்தல் புகாரால் விவசாயிகள் கொந்தளிப்பு

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *