திண்டுக்கல்லில் காரின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு
திண்டுக்கல்லில் காரின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு
100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுத்த போலீசார்!

திண்டுக்கல்லில் காரின் மேற்கூரையில் வைத்திருந்த நகைப் பெட்டியை மறந்து பயணித்த போது, சாலையில் தவறி விழுந்த 50 பவுன் தங்க நகையை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, நகையை எடுத்துச் சென்ற நபரை கண்டுபிடித்த போலீசார், முழு நகையையும் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருகபவனம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 30-ஆம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற்ற தனது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டுச் சென்றார்.
திருமண நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காக தனது மனைவியின் 50 பவுன் தங்க நகைகளை வீட்டில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது நகைகள் இருந்த பெட்டியை காரில் வைப்பதற்குப் பதிலாக, கவனக்குறைவால் காரின் மேற்கூரையில் வைத்துவிட்டு, அதை மறந்த நிலையிலேயே காரை இயக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் வத்தலகுண்டு இணைப்புச் சாலை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் மேற்கூரையில் இருந்த சிவப்பு நிற நகைப் பெட்டி தவறி சாலையில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கவனித்துள்ளார். பின்னர் அவர் சாலையில் கிடந்த நகைப் பெட்டியை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், திருமண நிகழ்ச்சிக்காக உசிலம்பட்டியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், சிறிது நேரம் கழித்து காரில் நகைப் பெட்டி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பல இடங்களில் தேடியும் நகை கிடைக்காததால், அவர்கள் மீண்டும் திண்டுக்கல் திரும்பினர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

அருண்குமார் பயணித்த பாதையை கண்டறிந்த போலீசார், திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு சிசிடிவி காட்சியில், காரின் மேற்கூரையில் இருந்த சிவப்பு நிற நகைப் பெட்டி கீழே விழுவதும், பின்னர் காவி நிற உடை அணிந்த ஒருவர் அந்தப் பெட்டியை எடுத்துச் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபர் எந்த திசையில் சென்றார் என்பதை கண்டறிய, அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்தனர். பல மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு, நகைப் பெட்டியை எடுத்துச் சென்ற நபர் அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான குழந்தை ராஜ் என்பது தெரியவந்தது.
பின்னர் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நகைகளில் 20 பவுன் தங்க நகையை வங்கி ஒன்றில் அடகு வைத்திருப்பதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியிலும் விசாரணை மேற்கொண்டு அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்டனர். மேலும், மீதமுள்ள நகைகள் அவரது வீட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, தவறி விழுந்த 50 பவுன் தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டு, அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சாலையில் தவறவிட்ட மிகப்பெரிய மதிப்புள்ள நகைகளை, சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் துரிதமாக கண்டுபிடித்து மீட்ட காவல்துறையினரின் நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்த சம்பவம், பயணத்தின் போது விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வேண்டிய அவசியத்தையும், குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உணர்த்தியுள்ளது.
