ஓரணியில் தமிழ்நாட்டை உருவாக்குவோம்! – அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழர்களின் மானத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க நாம் ஓரணியில் தமிழ்நாட்டை உருவாக்குவோம் என ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இன்றைக்கு ஜாதி மதங்களை கடந்து பல்வேறு இயக்கங்கள் உள்ளன. ஜாதி மத இயக்கங்களையும், கட்சிகளையும் கடந்து தமிழ் மக்கள் ஓரணியில் ஏன் ஒன்று சேர வேண்டும்?, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க பல்வேறு இயக்கங்கள் இருந்தாலும், தலைவன் இல்லை.
தமிழகத்தில் தமிழருக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரே முதல்வர் கழகத்தினுடைய தலைவர் தளபதியார் மட்டுமே. மக்கள் இயக்கமாக உருவாகி சமூக இயக்கமாக உருவாகி தொண்டு செய்வதற்கு என்று ஒரு இயக்கம் இந்தியாவிலேயே இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.
தமிழகத்தில் எங்கே அநீதி நடக்கிறதோ, மக்கள் வைக்கின்ற கோரிக்கைக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக நம்முடைய தளபதியார் உள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மதவாதத்திற்கு எதிராக போராட குரல் கொடுத்தார், மதவாதத்தை வேரோடு முறியடிப்போம் என்றார்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் தேர்தலுக்காக அல்ல முதலில் தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடிய உரிமை மத்திய அரசால் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
நமது உரிமையை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்று அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்தியில் இருக்கக்கூடிய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஆட்சி செய்ய முயற்சி செய்தார். அதை முறியடித்த ஒரே முதலமைச்சர் இந்தியாவிலேயே தளபதியார் ஒருவர் மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே மிகவும் உயர்ந்த பதவி ஜனாதிபதி பதவி அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனால் உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்று கூறினார்கள், ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் உடனடியாக சட்டமாக வேண்டும், அதனை நீங்கள் கையில் வைத்திருக்கக் கூடாது என்று ஆணித்தரமாக கூறினார்கள்.
ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் கையில் இருக்கிறது, வேறு யாரு கையிலும் இல்லை. நாளை தொடங்குகிற இயக்கம் மக்களை சந்திக்கின்ற இயக்கம். நம்முடைய மக்கள் சக்திக்கு மீறிய சக்தி இந்தியாவிலேயே இல்லை என்பதை மக்கள் உணர வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்திற்கு அடித்தளம் திண்டுக்கல் மாவட்டமாக இருக்க வேண்டும், சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்கள் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்கள், இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அவர்கள் உயிரை கொடுத்து பெற்ற சுதந்திரம். அப்படிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நாளைக்கு ஓரணியில் தமிழ்நாடு என்ற கொள்கையை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்து கல்வியை வியாபாரமாக இன்றைக்கு பாஜக அரசு மாற்றியுள்ளது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் உலக அளவில் திறமையானவர்கள்.
எதிர்க்கட்சியினர் தமிழ்நாட்டுடைய மானத்தை அடகு வைத்து விட்டார்களா? மானம் நம்முடைய பண்பாடு நம்முடைய கலாச்சாரத்தை காக்க வேண்டும், நம்முடைய மண்ணை காக்க வேண்டும், தமிழர்களுடைய மானத்தையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்கு நாம் ஒருங்கிணைந்து ஓரணியில் தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு, கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச் சாகுபடி முகவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

