திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித அன்னை வேளாங்கண்ணி மாதாவின் ஆண்டுவிழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித அன்னை வேளாங்கண்ணி மாதாவின் 45 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக துவங்கியது.
96 கிராமங்களின் தாயகமாக விளங்கும் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள புனித அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் 45 ஆவது ஆண்டு விழா பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக துவங்கியது.
முன்னதாக மாதாவின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி மற்றும் மாதாவின் மின் தேர் பவனி ஆனது புனித வியாகுல அன்னை ஆலயத்தில் இருந்து மேட்டுப்பட்டி புதூர் மற்றும் எனாமல் ஃபேக்டரி ரோடு வழியாக எடுத்துச் சென்று வேளாங்கண்ணி மாதா ஆலயத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராஜ் மாதாவின் திருவுருவம் பதித்த கொடியினை அர்ச்சித்து பின் திருக்கொடியானது ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருவிழாவானது வெகு விமர்சையாக துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான வருகின்ற 7ஆம் தேதி மின் தேர் பவனியும், எட்டாம் தேதி மாபெரும் அன்னதானமும் நடைபெற உள்ளது. கொடியேற்று விழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாதாவின் அருள் பெற்று சென்றனர்.