ஐசரி கணேஷ் மீது சொத்து மோசடி வழக்கு : விரைவில் நோட்டீஸ்!
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், வேல்ஸ் கல்வி குழுமத்தின் நிறுவனருமான ஐசரி கணேஷ் மீது, அவரது தங்கை அழகு தமிழ்ச்செல்வி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.
அந்த புகாரில், ஐசரி கணேஷ் தன்னை வேல்ஸ் கல்வி குழுமத்தில் இருந்து போலியான சான்றுகளை கொடுத்து நீக்கியதாகவும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐசரி கணேஷ் மீது அவரது சகோதரியே மோசடி புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐசரி கணேஷ் மீது சொத்து மோசடி வழக்கு மற்றும் வேல்ஸ் எஜுகேஷன் டிரஸ்டில் இருந்து தன் தங்கையை சட்டவிரோதமாக நீக்கிய வழக்கு 7 தொடர்பாக, அவரது இளைய தங்கை டாக்டர் அழகு தமிழ்செல்வி அளித்த புகாரின் பேரில், (புகார் எண் C.No.527/DC CCB-II/COP/VIS/2025) சென்னை கிரைம் பிரான்ச் சிசிபி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.
டாக்டர் அழகு தமிழ்செல்வி சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு உட்பட்டார். விசாரணையின் போது அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப, அவர் அதற்கு அனைத்துக்கும் தெளிவான பதில்களை வழங்கினார். மேலும், சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களையும் அவர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கு தொடர்பில் குற்றச்சாட்டு எதிர்நோக்கும் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் விசாரணைக்கான நோட்டீஸ் விரைவில் அனுப்பப்படும் என்று CCB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

