ஸ்ரீசங்கரா கல்லூரியில் புதிய தன்னார்வலர்களுக்கு 3நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம்
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் கல்வியாண்டில் புதிதாக நாட்டு நலப்பணித் திட்டத்தில் சேர்ந்துள்ள தன்னார்வலர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் 14.10.2025 முதல் 16.10.2025 வரை நடைபெற்றது.
மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் விதமாக வருடந்தோறும் தவறாமல் நடத்தப் பெறுகிறது என்று நிகழ்வில் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் முனைவர் கலை. இராம. வெங்கடேசன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் தொடக்கவிழா 14.10.2025 அன்று நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் மேனாள் வேலைவாய்ப்புத்துறை அலுவலர் திரு தணிகைவேலு கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து முதலுதவி, பேரிடர்கால பயிற்சி, வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் களப்பயணம், டெங்கு விழிப்புணர்வு, சுகாதாரக் கல்வி, நாட்டு நலப்பணித் திட்ட அடிப்படைகள் மற்றும் செயல்பாடுகள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் துறை சார்ந்த வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் பல்லவன் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் TGP. மோதிலால் கலந்து கொண்டு பயிற்சி முகாமில் ஈடுபட்ட மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார். அவர்களைத் தொடர்ந்து காரைக்குடியைச் சேர்ந்த வாழ்வியல் திறன் பயிற்சியாளர் சொ. வினைதீர்த்தான் கலந்து கொண்டு வெற்றிக்குப் பத்து வழிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் இப்பயிற்சி முகாமில் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ம. கணபதி, ஆர். சுரேஷ் குமார், மு.விவேகானந்தன், ப. பூர்ணிமா ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.

