ஸ்ரீ சங்கர மடம் சார்பில் பிள்ளைப்பாக்கம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் அருகாமையில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் நடத்தப்பெறும் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அருளாசியுடன் ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றுவரும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் காஞ்சி சங்கர மடம் சார்பில் கலை கலாச்சார பண்பாட்டு கல்வியுடன் நவீன அறிவியல் கல்வியும் காஞ்சிபுரம் ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கல்லூரி வாயிலாக வழங்கப்படுகிறது.

அவ்வகையில் 16.10.2025 அன்று மாலை நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் திருமதி. கே.ஆர். விஜயா அவர்கள் கலந்துகொண்டு ” தித்திக்கும் தீபாவளி” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் பல கதைகளையும் சொல்லி ஆன்மீக நம்பிக்கையையும் அவற்றில் பொதிந்திருக்கும் அறிவியல் உண்மைகளையும் வெளிப்படுத்தி, தீபாவளி திருநாள் கொண்டாடப்பெறும் காரணங்களையும், பாதுகாப்பாகவும் இயற்கை சூழலுக்கு ஊறுநேராமலும் தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாட வேண்டிய அவசியத்தையும் விளக்கி
உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தீபாவளி பரிசு பொருட்கள், எழுது பொருட்கள், கல்வி உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் ஸ்ரீ சங்கரா கல்லூரியின் சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு ஸ்ரீ சங்கரா கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஆர். வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் திருமதி சௌமியா ராமானுஜம் மற்றும் ஸ்ரீ சங்கரா கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். முனைவர் மஞ்சுளா வரவேற்றார்கள், முனைவர் ஜெ. இராதாகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

ஸ்ரீ சங்கரா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை அலுவலர்கள், மாணவர்கள், திண்ணைப்பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனப் பலரும் திராளாகக் கலந்து கொண்டனர்.

