காஞ்சிபுரத்தில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் ‘உயிர்ம வேளாண்மை கண்காட்சி’ மற்றும் கருத்தரங்கத்தை கைத்தறி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மைத்துறை சார்பில் ‘உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி’ மற்றும் ‘கருத்தரங்கம்’ நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.
எம்பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சிக்குழுவின் துணைத்தலைவர் நித்யா.சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.கிருஷ்ணவேணி வரவேற்று பேசினார்.
கண்காட்சியில் வேளாண்மை பொறியியல் துறை, மண்பரிசோதனை செயல் விளக்கம், பட்டு வளர்ச்சித்துறை, மீன்வளத் துறை, உழவர் பயிற்சி மையம், தோட்டக்கலைத்துறை, பாரம்பரிய அரிசி மற்றும் நெல்ரகங்கள் ஆகியன இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் 10 விவசாயிகளுக்கு ரூ.7,02,788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் பி.முருகன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் ந.ஜீவராணி, வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.சுரேஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரா.லட்சுமி ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் வேளாண்மை தொடர்பாக தொழில் நுட்ப உரை நிகழ்த்தினார்கள்.
விவசாயிகள், அதிகாரிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடைபெற்றது. நிறைவாக வேளாண்மை உதவி இயக்குநர் ப.காளியம்மாள் நன்றி கூறினார்.

