ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம்

ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற தங்க தேர் உற்சவ நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி, தங்க ரத உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, மயில் கழுத்து நீல நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, சம்பங்கி பூ, சாமந்திபூ கண்ணாடி வளையல் மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் சங்கல்பம் செய்து தந்தரத உற்சவத்தினை துவக்கி வைத்தார்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், படு நெல்லி தயாளன் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் சக்தி, பராசக்தி” என கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர். விழாவில் ஆலய மணியக்காரர் சூரி. ஷாம் சாஸ்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


