காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் நிர்வாக சீர்கேடு, ஆகம விதிமுறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் நிர்வாக சீர்கேடு, ஆகம விதிமுறைகளையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், காஞ்சி அத்திவரதர் ஆலய பாதுகாப்பு குழு சார்பில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் பெருமையும் வாய்ந்த வரதராஜா பெருமாள் கோவிலில் ஆகம விதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இந்த சமய அறநிலையத்துறை அதிகாரி செயல்படுவதாகவும், கோவில் குளமாகிய அனந்த சரஸில் நீராடவும் அமாவாசை காலங்களில் தர்ப்பணம் செய்யவும் தடை விதித்து குளத்திற்கு வேலி போட்டு பூட்டியுள்ளதையும், தொல்லியல் துறைக்கு எந்தவித தகவலும் தராமல் மிகப் பழமையான கோயிலின் பாரம்பரிய அமைப்பிற்கு சேதம் விளைவிக்கும் வகையில் கட்டுமான பணிகளை செய்வதையும், தரிசன கட்டணம் இல்லை என்று கூறும் நிலையில் தமிழில் அர்ச்சனை என்று ஆங்கிலத்தில் டோக்கன் போட்டு வெளியூர் பக்தர்களிடம் பணம் வசூலிப்பதையும் கண்டித்தும்,காஞ்சி அத்தி வரதர் ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்து முன்னணி மாநில செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநிலத் துணைத் தலைவர் பரமேஸ்வரன் பாஜக ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் ஷெல்வி தாமோதரன், பாஜக மாவட்ட தலைவர் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரதராஜ பெருமாள் கோவில் ஆலய நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஞானவேல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தோஷ் மோகன். கல்விக் காவலர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


