காஞ்சிபுரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை
காஞ்சிபுரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கையை திங்கள்கிழமை கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி சங்கரா கல்லூரி சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை தொடக்க விழா, தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டு நிறைவு விழா, காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்கள் வெளியீட்டு விழா ஆகியன நடைபெற்றது.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரியின் தலைவர் சேது.ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர், கல்லூரி செயலாளர் வி.பி.ரிஷிகேஷன், முதல்வர் கலை.ராம.வெங்கடேசன், தமிழ்த் துறைத்தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ப்பேராசிரியர் தெய்வசிகாமணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்க நிகழ்வாக திருப்பதியிலிருந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக ஆசியுரை வழங்கினார். தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டுத் தொகுப்புகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
பின்னர் தெய்வத்தமிழ் ஆய்விருக்கையின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சத்தை மருத்துவர் சுதா.சேஷய்யன் நன்கொடையாக வழங்கினார். காஞ்சிபுரம் கோயில்கள் பற்றிய 50 நூல்களையும் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
கம்பவாரிதி இலங்கை.இ.ஜெயராஜ் தெய்வத்தமிழ் ஆய்விருக்கை தொடர்பான அறிவிப்பு பதாகையை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ் அறிஞர்கள், கோயில் அறங்காவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை சிறப்பாக செய்திருந்த சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கே ஆர் வெங்கடேசன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ் துறை தலைவர் J. ராதாகிருஷ்ணன் நன்றிகளை தெரிவித்தார்.

