குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் நவராத்திரி முன்னிட்டு ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் திருகாப்பு கட்டினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மஹிஷா சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ம் தேதி கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தசரா திருவிழாவில் மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் கொடியேற்றம் நடைபெற்றதும் காப்பு கட்டி தாங்கள் வேண்டிய காளி, குரங்கு, அம்மன், முருகன், சிவன், பார்வதி கரடி, குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேதங்கள் அணிந்து குழுவாகவும் தனியாகவும் ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறக்கூடிய 10-ம் திருவிழா அக்டோபர் 2-ம் தேதி அன்று கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

தசரா திருவிழாவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உலோகங்களான வாள், ஈட்டி போன்ற ஆயுதங்கள் கொண்டுவர காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் ஜாதி ரீதியான அடையாளங்களை குறிக்கக்கூடிய கொடிகள் ஆடைகள் அணிவித்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *