கும்பகோணத்தில் ஸ்டிக்கரை ஒட்டி சிக்கலில் மாட்டிக் கொண்ட விஜய் கட்சியினர்!
கும்பகோணத்தில் ஸ்டிக்கரை ஒட்டி சிக்கலில் மாட்டிக் கொண்ட விஜய் கட்சியினர், இரவோடு இரவாக வீடு வீடாக ஓட்டிய ஸ்டிக்கரை மறைத்து புதிய ஸ்டிக்கரை ஒட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கேளிக்கு உள்ளாகியுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரை திமுகவினர் வீடு வீடாக ஒட்டி வருவதை போன்று தமிழக வெற்றி கழகத்தினர் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை கும்பகோணத்தில் வீடு வீடாக ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஸ்டிக்கரில் தவெக தலைவர் விஜய்யும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படமும் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு வீடு வீடாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கருக்கு மேல் அவசர அவசரமாக புஸ்ஸி ஆனந்த் படம் இல்லாத புதிய ஸ்டிக்கர்களை தவெகவினர் ஒட்டி சென்றுள்ளனர்.
தற்போது அந்த ஸ்டிக்கருக்கு மேல் புதிய ஸ்டிக்கர் ஒட்டப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கும்பகோணம் தவெக நிர்வாகிகளிடம் விசாரித்த போது, தமிழக வெற்றி கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஸ்டிக்கரில் உள்ள தன்னுடைய படத்தை நீக்குமாறு உத்தரவிட்டார். அதன் காரணமாகத்தான் அவர் படம் இன்றி புதிய ஸ்டிக்கரை அச்சடித்து ஒட்டியதாக தெரிவித்தனர்.

