உலகின் மிக இளைய யோகா பயிற்சியாளர் – 8 வயது சிறுமிக்கு பாராட்டுமழை
உலகின் மிக இளைய யோகா பயிற்சியாளராக திகழும் 8 வயது சிறுமி ஜெய் ஆருத்ராவுக்கு பாராட்டுமழை குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கல்வி இன்டர்காண்டினென்டல் பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் கல்வி பயின்று வரும் 8 வயது ஜெய் ஆருத்ரா, தனது யோகா திறமையை மதுரை மாநகர ஏ.ஆர். மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில், 600 காவல் துறையினருக்கு நேரடி யோகா பயிற்சி வழங்கினார்.
இந்த நிகழ்வில் மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர் லோகநாதன் IPS அவர்கள், உலகின் மிக இளைய யோகா பயிற்சியாளர் என்ற கின்னஸ் சாதனை பெற்ற ஜெய் ஆருத்ராவைப் பாராட்டி நினைவுப் பரிசும் கின்னஸ் சாதனைக் கண்ணிக்கோலையும் வழங்கி கௌரவித்தார்.
சிறுமி ஜெய், அமைதியான அணுகுமுறையுடன், அதிகாரிகளுக்கு ஆசனங்கள், மூச்சுப்பயிற்சிகள் மற்றும் கவனக்குவிப்பு முறைகள் மூலம் தன்னலம், மனச்சாந்தி, உடல் உறுதி ஆகியவற்றை வளர்க்கும் பயிற்சியை வழங்கினார்.
அவருடைய வழிகாட்டல், போலீசாரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
6 வயதில் கின்னஸ் சாதனை படைத்த ஜெய், தற்போது 200 மணி நேர சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்சியாளர்.
பிஸ்டல் ஷூட்டிங், நீச்சல், மலை ஏற்றம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். மொபைல் சாதனங்களை தவிர்த்து, ஒழுக்கமிக்க காலை வழக்கத்துடன் வாழும் ஜெய், இளைய தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.
இந்த நிகழ்வில் துணை காவல் ஆணையர், கல்வி பள்ளியின் தலைவர் மற்றும் முதல்வர், ஆசிரியர்கள், மற்றும் பல மாணவர்களின் முன்னிலையில் கின்னஸ் சிறுமியை பாராட்டினர்.

