பொன்னேரி துர்கா தேவி கோவில் ஆடிப்பூர விழா: பெண்கள் வளைகாப்பு நடத்தி வழிபாடு
பொன்னேரி துர்கா தேவி கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி வழிபட்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட துர்கா நகரில் மிகவும் பழமைவாய்ந்த அருள்மிகு துர்கா தேவி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்வாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
முன்னதாக அங்குள்ள பெருமாள் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மேளதாளம் முழங்க அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, பழவகைகள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

இதனை தொடர்ந்து மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் துர்கா தேவி அம்மனுக்கு வளையல் பூட்டி மஞ்சள், சந்தனம் குங்குமமிட்டு மலர்கள் தூவி வளைகாப்பு நடத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்வின் நிறைவாக அம்மனுக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் துர்கா தேவி அம்மனை வழிபட்டு சென்றனர்.

