பொன்னேரி அருகே அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பொன்னேரி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியே 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொன்னேரி அடுத்த சக்தி நகர் பகுதியில் சாலை முற்றிலுமாக சிதிலமடைந்து சேறும் சகதியமாக மாறியதை கண்டித்து அவ்வழியே வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை சேறும் சகதியுமாக மாறி கிடப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். மேலும் சிதிலமடைந்த சாலையால் பேருந்து சேவையும் அவ்வப்போது தங்களது கிராமத்திற்கு நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை சீரமைக்கப்படாமல் நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டி பேருந்தை சிறை பிடித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குவாரிகளிலிருந்து மண் ஏற்றி செல்லும் லாரிகளால் தங்களது கிராமங்களுக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து சாலையில் உள்ள சேற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்தை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

