குடிநீர் பாட்டிலில் பல்லி! – குடும்பத்தினர் அதிர்ச்சி! -ஆய்வு செய்த அதிகாரிகள் சிறைபிடிப்பு?
பொன்னேரி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் விற்பனை செய்த குடிநீர்பாட்டிலில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், காவல்துறை உதவியினருடன் உணவு பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகளை உள்பக்கமாக தாழிட்டு பூட்டி வைக்கப்பட்ட சம்பவத்தால் பொன்னேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சியின் 31ஆவது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவரது சொந்த ஊரான சிங்கிலிமேடு கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்காக பாபு இன்று குடும்பத்துடன் வந்திருந்தார்.
மதிய விருந்துக்காக பொன்னேரியில் உள்ள தனியார் குடிநீர் ஆலையில் குடிநீர் பாட்டில்களை வாங்கி இருந்தனர். உணவு பரிமாறும் போது குடிநீர் பாட்டில் ஒன்றை பிரித்தபோது, அதில் பல்லி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குடிநீர் ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டபோது மெத்தனப்போக்காக பதில் அளித்தது அவர்களுக்கு வேதனை அளித்தது.
இதனைக் கண்டித்து குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லி விழுந்த குடிநீர் பாட்டில் மட்டுமின்றி பல குடிநீர் பாட்டில்களை அங்கிருந்தவர்கள் அருந்தியுள்ளதாகவும் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தனியார் குடிநீர் தொழிற்சாலை நிர்வாகமே அதற்கு காரணம் என தெரிவித்தனர்.
மேலும் குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி தயாரிப்பு எண் போன்றவை அச்சிடப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் தண்ணீர் கம்பெனிக்கு வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் மற்றொரு கட்டிடத்தில் உள்ள 25 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உள்ள அறைக்குள் சென்றபோது பணியாளர்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சந்திரசேகர் உள்ள அதிகாரிகளை வைத்து உள் தாழ்ப்பாள் போட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கதவை தட்டினர். அவர்களையும் உள்ளே அனுப்பி பின் உள் தாழ்ப்பாள் போட்டனர்.
நீண்ட நேரத்திற்கு பின் வெளிவந்த உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் தற்காலிகமாக தண்ணீர் தயாரிப்பு பணிகளை நிறுத்தி உள்ளதாகவும் தனது மேலதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின் தான் முடிவு தெரியும் எனவும் கூறினார்.

