சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது ஜெயந்தி – ராமநாதபுரத்தில் ஒற்றுமை பேரணி
ராமநாதபுரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது ஜெயந்தியை முன்னிட்டு மேரா யுவா பாரத் அமைப்பின் சார்பில் “யூனிட்டி மார்ச்” சிறப்பாக நடைபெற்றது.

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, “ஏக் பாரத் – ஆத்த்மநிர்பர் பாரத் (Ek Bharat – Aatmanirbhar Bharat)” என்ற தலைப்பில், மேரா யுவா பாரத் (MY Bharat) ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் “Unity March @150” (ஒற்றுமை பேரணி) சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. இப்பேரணி தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கி, அம்மா பூங்கா வரை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் அலுவலர் சம்யக் எச். மேஷ்ரம் தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், “சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமிட்ட தலைசிறந்த தேசிய தலைவர். அவரது கனவுகளை நிறைவேற்ற இன்றைய இளைஞர்கள் தேசிய ஒற்றுமையும் சமூக ஒத்துழைப்பும் வளர்க்க வேண்டும்,”
எனத் தெரிவித்துள்ளார்.

பேரணியில் பல கல்வி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள், சமூக அமைப்புகள், Rotary, NSS, NYK உறுப்பினர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர் கிளப் உறுப்பினர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தி, “ஒற்றுமையே பலம்”, “வல்லபாய் பட்டேல் வாழ்க”, “நமது தேசம் – நமது பொறுப்பு” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
பேரணி முழுவதும் தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. வழியெங்கும் பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்று பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜவஹர் சிறுவர் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பான கலாச்சார நிகழ்ச்சிகளை வழங்கினர். தேசபக்திப் பாடல்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகங்களின் மூலம் மாணவர்கள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். அவர்களின் நிகழ்ச்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
அனைத்து விருந்தினர்களும் மற்றும் பங்கேற்பாளர்களும் மேரா யுவா பாரத் அமைப்பினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இளைஞர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் பல்வேறு செயல்திட்டங்கள் விரைவில் நடைபெறும் என மாவட்ட இளைஞர் அலுவலர் தெரிவித்துள்ளார்.

