ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தஞ்சையை சேர்ந்த 3 பேர் பதக்கம் வென்று அசத்தல்
தென்கொரியாவில் நடைபெற்ற 20 வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ சுந்தரம், சரவணன் ஆகியோர் வெண்கல பதக்கமும், கான்யா ஸ்ரீ வெள்ளி பதக்கமும் வென்று தாயகம் திரும்பினர்.
பதக்கங்கள் வென்று தஞ்சை வந்த 3 பேரையும் மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி வரவேற்று வாழ்த்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்யாஸ்ரீ, “தென்கொரியாவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை 20வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது.”
“இதில் 13 நாடுகள் பங்கேற்றன. இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 29 பேர் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சென்ற கான்யா ஸ்ரீ பெர்பி விளையாட்டில் வெள்ளி பதக்கமும், இன்லைன் ஹாக்கி விளையாட்டில் செல்வசுந்தரம், யோகன் சரண் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.” என்று தெரிவித்தார்.

