சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி!
தஞ்சாவூரில் சிலம்பாட்டத்தில் கொசாக் ஸ்குவார்ட்ஸ் செய்தவாறு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் யோவான் சிலம்பாட்ட கழகம், ஸ்டார் சிலம்ப பயிற்சி பள்ளி, தஞ்சாவூர் கரந்தை தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து சோழன் உலக சாதனை முயற்சி சிலம்பாட்ட நிகழ்ச்சி கரந்தை கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த சாதனை சிலம்பாட்ட நிகழ்ச்சியை கரந்தை தமிழ்ச்சங்க செயலாளர் சுந்தரவதனம் தொடங்கி வைத்தார்.

இதில் 40 மாணவர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு மாணவரும் 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக கொசாக் ஸ்குவார்ட்ஸ் செய்தவாறு, அதாவது கால்மூட்டு மடக்கி அமர்ந்து எழுந்த நிலையில் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
மாணவர்களின் இந்த முயற்சியானது சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

