தமிழகத்திலேயே நூறாவது ரத்த வங்கி! – பொன்னேரி அரசு மருத்துவமனையில் திறப்பு
பொன்னேரி அரசு மருத்துவமனையில் தமிழகத்திலேயே நூறாவது ரத்த வங்கியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்ததால் பொன்னேரியில் ரத்த வங்கி ஏற்படுத்த பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில் ஆயிரம் சதுர அடியில் 2 படுக்கைகளுடன் கூடிய ரத்த வங்கி ஏற்படுத்தப்பட்டு மக்களின் செயல்பாட்டுக்காக திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் மற்றும் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா, பொன்னேரி தலைமை மருத்துவர் கல்பனா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், பொன்னேரி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வார்டுகள், அவர்களுக்கு உணவு தயாரிக்கப்படும் உணவுக்கூடம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது தலைமை மருத்துவ அலுவலரின் அறைக்கு சென்ற போது மின்தடை ஏற்பட்டு, மீண்டும் மின்சாரம் வந்தது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரதாப், “தமிழகத்திலேயே பொன்னேரி அரசு மருத்துவ மனையில் நூறாவது ரத்த வங்கி திறக்கப்பட்டுள்ளது, இதனால் ரத்த சேமிப்பது மட்டுமின்றி ரத்த கொடுத்து மற்ற பகுதிகளுக்கும் எடுத்து செல்ல வசதியாக இருக்கும், அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும், பொன்னேரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும், நாய்க்கடி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

