நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பாமகவினர்:
பூம்புகாரில் நடைபெற்ற பாமக மாநாட்டிற்கு சென்று வந்த பெண்களிடம், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தி விட்டு செல்லுமாறு ஆபாசமாக பேசிய சுங்கசாவடி ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கோரி, பாமகவினர் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தலைமையில் நேற்று பூம்புகாரில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் மாநாட்டிற்கு சென்று மாநாடு முடிந்தவுடன் வாகனங்களில் கட்சியினர் வீடு திரும்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நல்லூர் பகுதியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பெண்கள் சென்ற வாகனத்திற்கு ‘பணம் கட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என வாக்குவாதத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதை அடுத்து, அடுத்தடுத்து பின்னால் வந்த ஐந்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்தி விட்டு செல்லுமாறு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்களை காக்க வைத்து நிலையில் ஊழியர்களுக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் காவல்துறையினரையே மிரட்டும் தோணியில், ‘சுங்கச்சாவடி விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள்’ என பேசியதாக கூறப்படுகிறது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலான பேச்சுவார்த்தையில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற வாகனங்களால் பெண்கள் மாநாட்டிற்கு சென்று வந்த கட்சியினர் பெறும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில், இன்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் துணைத் தலைவரும் திருத்தணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “நள்ளிரவில் பெண்கள் மாநாட்டிற்கு சென்று வந்த வாகனத்தை விடாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்து பெண்களை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் இனி எந்த கட்சி மாநாட்டிற்கு சென்றாலும் அவர்களது வாகனத்தை அனுமதிக்க வேண்டும்” என சுங்கச்சாவடி முற்றுகையிட்டனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் வருவதைக் கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

