தீப்பிடித்து எரிந்த ‘புல்லட்’: குழந்தையுடன் உயிர் தப்பிய குடும்பத்தினர்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகே திடீரென என்ஃபீல்ட் புல்லட் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத இந்த விபத்தில், குழந்தையுடன் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த உலகளாம்பாடி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன்(33) ஐடி கம்பெனி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மருத்துவ பரிசோதனைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பிற்பகல் 1 மணி அளவில் வந்த அவர் 2 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் 3 மணி அளவில் தனக்கு சொந்தமான என்ஃபீல்ட் கிளாசிக் ரக வாகனத்தில் தனது வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தையுடன் புறப்பட்டுள்ளார்.
சிறிது தூரம் திருவண்ணாமலை மாட வீதி கோவில் அருகே சென்றவுடன் பேட்டரி அருகே தீப்பிடித்து எரிந்து பெட்ரோல் டேங்க் வெடித்தது. இதனால் வண்டி முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கூச்சலிடவே உடனடியாக சுதாரித்துக் கொண்ட புருஷோத்தமன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார்.
கீழே விழுந்த என்ஃபீல்டு கிளாசிக் ரக வாகனம் கொழுந்து விட்டு திகுதிகுவென எரிந்தது. இதனை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவண்ணாமலை மாநகர போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாடவீதி கோபுர தெரு பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

