மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு – பொதுமக்கள் சாலைமறியல்
திருவண்ணாமலை அருகே குடிநீர் டேங்கில் உள்ள மின்மோட்டார் ஒயர் மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி யுவஸ்ரீ அப்பகுதியில் உள்ள குடிநீர் டேங்க் மின்மோட்டார் ஒயரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவரது உடலை செங்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக புதுப்பாளையம் காவல்துறையினர் எடுத்து வந்த நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்ல உறவினர்கள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, செங்கம் பெங்களூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்த போளூர் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் மேல் செங்கம் காவல் ஆய்வாளர் சாந்தி ஆகியோரது வாகனங்களை முற்றுகையிட்டு அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

