EPS கருத்துக்கு விமர்சனம் கொடுத்த சபாநாயகர்

EPS கருத்துக்கு விமர்சனம் கொடுத்த சபாநாயகர்

அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்விக்கு செலவு செய்யக்கூடாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்திற்கு, சிரித்துகொண்டே அவருடைய நிலை இப்படி ஆகிப்போச்சு என தூத்துக்குடியில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அலாசியஸ் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டனர். பின்னர் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கினார்கள்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்விக்கு செலவு செய்யக்கூடாது, கோயிலுக்கு மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்து கேட்டதற்கு, “அரசியலுக்கு பதில் சொல்ல கூடாது பாவம் அவருடைய நிலை இப்படி ஆகிப்போய்விட்டது” என்றார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, “தமிழகத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் மூலமாக பெண்களுக்கான கல்வி நிலையங்கள் உருவானது. தமிழ்நாட்டில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான மொத்த நிதி அறிக்கையில் 46,797 கோடி ரூபாய் நிதி கல்விக்காக மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”.

“உயர்கல்விக்கு 8261 கோடி சம்பளத்தில் மொத்த வரவு செலவு திட்டத்தில் 13.4 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசு 50 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றது. அதில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் தான் கல்விக்காக ஒதுக்கீடு செய்கின்றார்கள் இது இரண்டு புள்ளி ஐந்து சதவீதமாகும், தமிழ்நாடு அரசு 13.4 சதவீதம் ஒதுக்கி உள்ளோம்”.

“விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை, ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்களில் அவர்களது நண்பர்களுக்கு 50 முதல் 100 பேருக்கு ரூ.16 லட்சம் கோடி ரூபாய் நிதியை தள்ளுபடி செய்துள்ளது. கல்வியில் சர்வ சிக்ச அபியான் திட்டத்திற்கு ஒதுக்கியுள்ள பணத்தை தர மறுக்கிறது புதிய கல்விக் கொள்கையை கையெழுத்திட அழுத்தம் கொடுக்கின்றனர்”.

“தற்போது 10, 12 வகுப்புகளுக்கு மட்டும் பொது தேர்வு நடத்தப்படுகிறது. புதிய கல்விக்களில் 3, 5, 8ம் வகுப்பில் பொது தேர்வு நடத்தப்படுகின்றன. 9 வயதில் அந்த மாணவர்கள் தோல்வியுற்றால் அவர்கள் குலதொழிலுக்கு அனுப்பப்படுவார்கள் அவர்கள் நோக்கம் 10% உயர் ஜாதியினர் மட்டும் படிக்க வேண்டும் 90 சதவீதம் இந்துக்களுக்கு எதிரான சட்டம் ஆர்எஸ்எஸ் சனாதன இயக்கம் கொண்டு வருகிறது”.

“90 சதவீதம் இந்துக்களுக்கு ஆதரவான சட்டத்தை தமிழகத்தில் கல்வியை பெற்று தந்தது இந்த கிறிஸ்தவ அமைப்புகள் தான், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அருட்தந்தையர்கள் தான் தென்னிந்திய திருச்சபை தான் நம் முன்னோர்களுக்கு முதலில் கல்வியை தந்தது. சமூக நீதிக்கு வித்திட்டது இவர்கள்தான்” என்றார்.

“சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்படும் கட்டிடத்தை மகாராஷ்டிரா ஆளுநர் திறந்து வைப்பதில் தவறில்லை” என்று கூறிய அவர், “தமிழக முதலமைச்சர் கல்விக்காக நிதியை கொடுத்து திறப்பதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது திறக்க வருவீர்கள் என்று மகாராஷ்டிரா ஆளுநரிடம் கேளுங்கள்” என்றார்.

பாமக கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் தந்தை மகனுக்கு இடையிலான பிரச்சனை அந்தக் கட்சியில் எம்எல்ஏ நீக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “சட்டப்பேரவை நடக்கும்போது அது குறித்து பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *