பல மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது – கனிமொழி MP
பல மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி கருணாநிதி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு ஊராட்சி – சோரீஸ்புரத்தில், மாநில பேரிடர் நிவாரண நிதி 2024-25 கீழ் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., “சுமார் ஆயிரம் பேருக்கு மேல் தங்கக்கூடிய பல்நோக்கு புகலிட மையம் இங்கே அமைக்கப்பட இருக்கிறது.

புயல் மற்றும் பேரிடர் இல்லாத காலங்களில் இதை ஒரு மாதிரி பள்ளியாகவும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு, இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.”
“கிட்டத்தட்ட 700 மாணவர்களுக்கு மேல் படிக்கக்கூடிய மாடல் பள்ளி, 20,000 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் கட்டப்பட இருக்கிறது.”
“இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் இன்று முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நாட்டப்பட்டுள்ளது.”
“சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய குழப்பங்கள் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகளுக்கு தெளிவான விளக்கங்களையும் ஆணைகளையும் வழங்கியுள்ளார்.”

“எப்படி இதை எதிர்கொள்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், பல இடங்களில் இதைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது.”
“இது தமிழ்நாட்டில் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”
பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு, “நீதி வெல்லவேண்டும், ஜனநாயகம் வெல்லவேண்டும் மக்கள் வெல்லவேண்டும் என்பதுதான் அத்தனை பேருடைய ஆசை; அது நடக்க வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிகழ்வில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா, அரசு அதிகாரிகள் உள்ளட்ட பலர் உடனிருந்தனர்.

