அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என வெளியாகும் செய்தி முற்றிலும் தவறான தகவல் என்பதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் கீதாஜீவன், அவைகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலைக் கல்லூரியில் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெர்சி முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவிகள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு தூய மரியன்னை கல்லூரியில் இருந்து புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. 18 வயது முடிந்த பின்பு தான் பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். தற்போது 18 வயதிற்கு முன்பே கர்ப்பமாகிறார்கள் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற முடிவை அவர்கள் எடுக்கின்றார்கள். ஆகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்”.

அங்கன்வாடி மையங்கள் மூடப்பவதாக செய்தித்தாளில் வந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு? “தவறானது தகவல், மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களில் அதன் அருகே உள்ள மையங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். மேலும் வேறு எங்கேயாவது அங்கன்வாடி மையங்கள் தேவைப்பட்டால் இந்த மையத்தை அங்கு வைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.
“ஆனால் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது, மூடப்படவில்லை. மலைப்பகுதியில் 34 சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களின் வசதி மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 6500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

